Pages

Sunday, March 29, 2020

#உமையம்மாள்_ராணி_எனும்_ஶ்ரீ_அஸ்வதி_திருநாள்# 3


#உமையம்மாள்_ராணி_எனும்_ஶ்ரீ_அஸ்வதி_திருநாள்# 3

சேரமான் பெருமாள் காலத்திற்குப் பின்பான சேர நாடு சிறு சிறு சமஸ்தானங்களாகப் பிரிக்கப்பட்டு சிறு சிறு நாடுகளாக சேர வழி வந்த மன்னர்களால்(?) ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அதில் மிக முக்கியமான பகுதி வேணாட்டுப் பகுதி. வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு
தலைநகரங்களைக் கொண்டு ஆளப்பட்டு வந்த வேணாட்டின் எல்லைகள் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன. களக்காடு முதல் கொல்லம் வரை இதன் எல்லை இருந்ததாகத் தோராயமாகச் சொல்லலாம்.........

வேணாட்டின் ஆட்சி அதிகாரம் பதினான்காம் நூற்றாண்டு வரை மக்கள் வழியில் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அதன் பிறகு வேணாட்டின் அதிகாரம் மருமக்கள் வழி மன்னர்களிடம் மாறுகிறது. சரியாக எந்த ஆண்டில் அல்லது யாருடைய ஆட்சியில் மருமக்கள் வழிக்கு மாறியது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட முடியவில்லை. ஆனால் வேணாட்டில், அதாவது இன்றைய தென்குமரி பகுதியில் நம்பூதிரிகள் வலிமை பெற்றது பதிமூன்றாம் நூற்றாண்டில் தான். வேணாட்டுப் பகுதிக்கு முன்னரே துலு தேசம், மலபார் பகுதிகள், சாமுத்திரிகளின் கோழிக்கோடு, கொச்சி சமஸ்தானம் ஆகியவை மருமக்கள் வழிக்கு மாறியிருந்தன. இப்போது நம்பூதிரிகளின் வருகையையும் மருமக்கள் வழியையும் இணைத்துப் பார்த்தால் மருமக்கள் வழி தொடங்கப்பட்டதின் நோக்கம் விளங்கும்.......

மருமக்கள் வழியின் அடிப்படை விதிகளின்படி மகனுக்கு தந்தையின் அதிகாரம் கிடைக்காது. மன்னனின் தங்கைக்கோ அல்லது தத்து எடுக்கப்பட்ட தங்கையின் மகனுக்கோதான் அதிகாரம் கிடைக்கும். இதனால் அக்காலத்தில் திருவாங்கூர் ராணிகள் எனப்படுபவர் மன்னனின் மனைவி அல்ல மன்னனில் தங்கையே ஆவர். முதலாம் பதிவில் குறப்பிட்டது போல மகயிரம் திருநாளின் மகன் அதித்ய வர்மா மன்னனாகிறார். அவரது தங்கை அஸ்வதி திருநாள் உமையம்மா ஆற்றிங்கல் ராணியாகிறார். இதில் அடுத்த விதி ராணிக்கு பிறக்கும் மகனின் தந்தைக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர் ஒரு மகனை உருவாக்கப் பயன்படுத்திய ஒரு ஆண் அவ்வளவே..........

பெரும்பாலும் அதற்குப் பயன்படும் கருவி ஒரு நம்பூதிரியாக இருப்பார் அல்லது வேறு தேசத்தில் இருந்து பயணப்பட்ட அரச குடும்ப இளைஞனாகவும் இருக்கலாம். அதனால் பிற்கால கேரள வரலாற்றில் பல மன்னர்களின் தந்தை பெயர் இடம் பெற்றிருக்காது. ஆனால் சில குறிப்புகளை ஆராயும்போது சமஸ்தானங்களில் வீரவரலாறு படைத்த மன்னர்களை ரேர் ப்ரீட் அல்லது வீரிய வித்து என்று குறிப்பிடப்படுவதைக் காணலாம். கோட்டயம் கேரளா வர்மா , மார்த்தாண்ட வர்மா போன்றவர்கள் அந்த வகைப்பட்டவர்களாவர். மார்த்தாண்ட வர்மாவின் தந்தையார் பிஜப்பூர் அரச குடும்பத்தில் இருந்து விருந்தினராக கொளத்துநாட்டிற்கு வந்தவர் எனவும் கூறப்படுவதுண்டு. உமையம்மா ராணியின் தாய் மகயிரம் திருநாள் என்பதைத் தவிர்த்து அவரது தந்தை இன்னார் என்பதற்கு எந்த குறிப்புகளும்
இல்லை. அவரது சாகசங்களை நோக்கும்போது அவரும் ஒரு ரேர் ப்ரீடாக இருக்கலாம்............

ஆதித்யா வர்மா வேணாட்டை ஆளத் தொடங்கியவுடன் ஆற்றிங்கல் ராணியாக இருந்த உமையம்மை ஒரு மகனை ஈன்றெடுக்க வேண்டும். அடுத்த குலசேகர பெருமாளை கொடுக்க வேண்டியவர் அவர்தான் ஆனால் அவருக்கு இணைகள் பலர் இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லை அதனால் இப்போது மருமக்கள் வழி வழக்கப்படி அவர் ஒரு மகனை தத்தெடுக்க வேண்டும். பொதுவாக தத்து எடுக்கும்போது பெரிய ஆலோசனைகளுக்கு பிறகே தத்தெடுப்பார்கள். ஆனால் உமையம்மை ராணி அவர்கள் அதிலும் தன்போக்கைக் கடைப்பிடுத்தார். அன்று தேசிங்கு நாடு ,கொட்டாரக்கர , நெடுமங்காடு, கருநாகப்பள்ளி , கார்த்திகபள்ளி, காயம்கொளம் போன்ற பல பகுதிகள் டச்சு படைகளின் சொல்படி நடப்பவைகளாக இருந்ததன. ஆதித்யா வர்மாவிற்கு பின்பான அரசு டச்சி கையில் வீழ வேண்டும் என்பது அன்றைய வேணாட்டு அரச குடும்பத்திற்கு எதிரானவர்களின் நோக்கமாக இருந்தது.

உமையம்மை தன் அடுத்த வாரிசை டச்சுக்கு ஏற்றதாக
தேர்ந்தெடுக்கவில்லை. தன்னைச் சூழ்ந்துள்ள பகுதிகள் எல்லாம் டச்சுக்களுக்கு அடிப்பணிந்து இருக்க டச்சு படைக்கு நேரெதிராக போர்ச்சக்கீசியர்களுக்கு அடிபணிந்து இருந்த கொச்சி சமஸ்தானத்தின் வெள்ளரப்பள்ளில் கோவில்லகத்தில் இருந்து 1672 ஆம் ஆண்டு ரவி வர்மாவை தனது மகனாக தத்தெடுத்துக் கொண்டார். இதன் மூலம் தன்தாயின் அதே கோவிலகத்துன் வாரிசை மீண்டும் வேணாட்டின் மன்னராக்க முடிவு செய்தார்.இதனால் நெடுமங்காடு உட்பட்ட அனைத்து அரச குடும்பங்களின் பெருங்கோபத்திற்கும் ஆளாகியிருந்தார். ஆனால் அதையெல்லாம் பொருட்டாகவே எண்ணாத உமையம்மாள் ராணி ஆதித்யா வர்மா காலத்திற்குப் பிறகு ரவிவர்மாவை வேணாட்டின் மன்னராக முடிச்சூட்டியிருந்தார். மேற்சொன்ன இந்த ரவி வர்மாவின் தத்தெடுப்பானது
போர்களுக்கும் புதிய வரலாற்றிர்க்கும் வழி வகுத்திருந்தது..............

உமையம்மாள் ராணியின்மேல் எட்டு வீட்டு பிள்ளைமாருக்கும் நெடுமங்காடு கேரள வர்மாவிற்கும் டச்சு கம்பெனிக்கும் கோபம் அதிமாகிக்கொண்டேயிருந்தது. வேணாட்டு மன்னரான ரவிவர்மாவின் பலவீனமும் அவர்களுக்கு ஏதுவாக இருக்க கலகங்கள் முற்றியது. எதற்கும் அடிபணியாத உமையம்மாள் ராணி திருவாங்கூர் அரச வரலாற்றிலிருந்து தன் வரலாறு மறைக்கபடுவதற்கான பெருங்காரியம் ஒன்றில் இறங்கினார். ஆம் பெரும் வீரனும் தன் காதலர்களில் ஒருவருமான கோட்டயம் கேரள வர்மாவை தன் இரண்டாவது மகனாக தத்தெடுத்து இரணியலின் இளைய ராஜாவிக்கினார் அந்த வீரனைக் கொண்டே தன் எதிரிகளை அடி பணிய வைத்தார்.

கோட்டயம் கேரள வர்மாவின் தத்தெடுப்பின் மூலம் தனது பெரும்பான்மையான எதிரிகளை இல்லாமல் செய்திருந்த உமையம்மாள் கோட்டயம் கேரள வர்மா எட்டு வீட்டு பிள்ளைமாரால் படுகொலை செய்யபட்டபின் சில சமரசங்களை செய்து கொண்டார். ரவிவர்மாவிற்கு பிறகான வாரிசுகளைச் சமரசங்கள் செய்து கொண்டு குளத்துனாடு கோலோத்திரி அரச குடும்பத்தில் இருந்து தத்தெடுத்துக் கொண்டார். இரண்டு ஆண் பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும் கோலோத்திரியில் இருந்து தத்தெடுக்க பட்டனர் அதில் ஒரு பெண்ணின் மகன்தான் டச்சு படையை வென்று திருவாங்கூரை கட்டியமைத்த மார்த்தாண்ட வர்மா.............

ஆக உமையம்மாள் என்ற அஸ்வதி திருநாள் தத்தெடுத்து கொண்ட பிள்ளைகளின் எண்ணிக்கை கோட்டயம் கேரள வர்மாவோடு சேர்த்து மொத்தம் எட்டு. அவருக்கென்று ஒரு மகன் இருந்திருந்தால் ஓரு வேளை வேணாட்டின் வரலாறு தொடர்ந்திருக்கலாம் அல்லது திருவாங்கூர் வரலாறு மாறியிருக்கலாம்.........

தொடரும்........


1.The genealogy of Sovereigns of travanncore- ulloor.s.Parameshwara Iyer
2.The Kulasekhara Perumals of Travancore -Mark De Lannoy
3.Governer General and council to the Heren XVII,0 dec 1689
4.VOC Documents during Stein van Gollanesse
5.Umayamma Rani - Ibrahim Kunju
6.A Survey of Kerala History - A Sreedhara Menon
7. தென் குமரி சரித்திரம் - அ .க பெருமாள்
8.Queen of Kuppakkas- The Ivory Throne
— with பா.ச. பாலசிங், Elstin Raj, Udaya Kumar, Vel Murugan, Satheesh Velayudhan and Dhinakar Nd.

No comments:

Post a Comment