Pages

Wednesday, April 8, 2020

12 years A slave(2013)

12 years A slave(2013)

ஒரு நாள் கண் விழித்து பார்க்கும்போது சங்கிலியால் பிணைக்கப்பட்டு உங்கள் அடையாளங்களை இழந்து நீ ஒரு அடிமை இனிமேல் இதுதான் உனது பெயர் இது தான் உனது நாடு என்று எல்லாம் மாற்றப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்.....? அப்படி மாற்றப்பட்ட ஒருவரின் உண்மை கதைதான் இது......
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாலமன் நார்த்தப் எனும் கறுப்பின அமெரிக்கர் நியுயார்க் நகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிறுதளவு நிலத்திற்கு சொந்தக்காரரும் வயலின் வாசிப்பதில் வல்லவருமான அவர் அடிமைத்தனத்தில் இருந்து விடைதலை பெற்ற ஒருவரின் மகன். இதனால் சாலமன் பிறப்பிலேயே ஒரு விடுதலையான கறுப்பர்(Freeman). சமூகத்தில் நல்ல மரியாதையோடு வாழ்ந்து வருகிறார்........
நல்ல சம்பளத்தில் வயலின் வாசிக்கும் வாய்ப்பு வாஷிங்க்டனில் இருப்பதாக இரண்டு வெள்ளயர்களால் அழைத்துவரப்பட்டு போதையேற்றப்பட்டு மயங்கிவிடுகிறார். விழித்து பார்த்தால் உனது பெயர் ப்ளாட் நீ ஜார்ஜியாவில் இருந்து வந்த அடிமை என்று மொத்த அடையாளமும் மாற்றப்பட்டு மனிதசந்தையில் விற்கபடுகிறார். ஏலசந்தையிலிருந்து பண்ணை அடிமையாக ஏலம் எடுக்கப்பட்டு அங்கிருந்து பருத்தி தோட்ட அடிமை தொழிலாளியாகி வெள்ளையினத்தின் அனைத்து கொடுமைகளயும் அனுபவித்து ஒரு நல்லவரின் உதவியால் விடுதலை அடைந்து மீண்டும் குடும்பத்தோடு சேர்கிறார்......
அவர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடிமையாக்க பட்ட இடத்தில் இருந்து கறுப்பின அடிமைசந்தையின் உச்ச கட்ட கொடுமைகளை உணரச் செய்கிறது படம். மனிதர்களாக அல்ல வெறும் வெள்ளையர்களுக்கு அடிமை வேலை செய்ய படைக்கபட்ட ஜந்துக்களாகவே கறுப்பர்கள் பார்க்கபட்டார்கள் என்ற உண்மையை அப்படியே சொல்கிறது படம்............
“Survivals not about certain death, its about keeping your head down...
Not just survive i want to live “ இது சக அடிமைக்கும் சாலமனுக்கும் நடக்கும் ஒரு உரையாடல். ஆம் பிழைத்து கிடப்பதல்ல வாழ வேண்டும் என்று உறுதியாக கூறுவார்........
மெயின் கதாபாத்திரங்களை விட சில காட்சியமைப்பால் அந்த கொடுமையின் வலியை நம்மிடம் கடத்திவிடுவார் அதன் இயக்குனர்.....
சாலமன் நார்தப் அடிமையாவதற்கு முன்பு தன் குடும்பத்தோடு கடைவீதியில் நிற்க அவரை ஏக்கத்தோடு பார்த்து செல்லும் ஒரு கறுப்பின அடிமை......
ஒரு சிறிய அறையில் பத்திற்கு மேற்பட்ட அடிமைகளோடு அடிமையாக படுத்திருக்கும் போது சக பெண் அடிமை தனது பாலியல் தேவைக்காக சாலமனிடம் உறவுக்கு முயற்சி செய்ய அவர் மரம் போல் படுத்திருக்க அவரது கைகளை மட்டும் பயன்படுத்தி விட்டு அவள் கதறி அழும் காட்சி......
பருத்தி தோட்ட முதலாளி ஒரு கறுப்பின பெண் குழந்தையை மிட்டாய் தருவதாக தோழில் தூக்கி செல்லும் வெள்ளை முதலாளியின் காட்சி........
தினமும் 500 பவுனட் பருத்தி பறிக்கும் பெண் இரவானால் முதலாளியால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்க படும் பெண் ஒரு சோப்பு துண்டிற்காக அடித்து தோலுரிக்க படும் காட்சி.......
அடிமை சந்தைக்கு ஏலத்திற்கு போகும் முன் அடிமைகள் தங்களை சுத்தம் செய்து கொள்ளும் காட்சி.........
பிளளைகள் பிரித்து விற்கபடும் காட்சியில் கதறி அழும் தாய்........
என்று படம் முழுக்க காட்சிகளால் அடிமைத்தனத்தின் வலியை அப்படியே கடத்தியிருப்பார் இயக்குனர்.........
வெகுசில படங்களை பார்த்த பிறகு சில மணிதுளிகள் அந்த படத்தை தவிர வேறு சிந்தனையே ஓடாது நேற்றும் அப்படித்தான் அரை மணிநேரமாவது இருந்த இடத்தில் இருந்து எழமுடியவில்லை...........
இந்த படம் பார்த்து முடிந்ததும் சாலமன் நார்த்தப்பை குறித்து தேடி பார்த்தேன் முப்பத்தியோரு வயதில் அடிமையாக்கபட்டு பன்னிரண்டு வருடங்கள் கழித்து விடுதலையாகி அடிமைத்தனத்திற்கு எதிராக போராடியது இருபத்தைந்திற்க்கு மேற்பட்ட கூட்டங்களில் பேசியது வெள்ளையர்களுக்கு எதிராக வழக்குகளை தொடுத்தது என வெள்ளையினவாதத்திற்கு எதிரான செயல்பாட்டாளராக/ போராளியாக இருந்தவர் நான்கு ஆண்டுகளில் மீண்டும் கானாமல் போயிருக்கிறார் அல்லது காணாமல் ஆக்கபட்டிருக்கிறார்........
1850ல் அமெரிக்க உண்மை வரலாறு, அமெரிக்க வெள்ளையினவாதம் , மனிதசந்தை , அடிமைத்தனம், சட்டம் ,சமூகம் இப்படி எல்லாவற்றையும் ஒற்றை சினிமாவில் பார்க்க வேண்டுமா - kindly watch this movie.......

பாரம்- Who killed Karuppasamy


வயது முதிர்ந்து பாரமாக மாறிவிடும் மனிதர்களை பாறாங்கல்லை போல ஈரமில்லா மனமாக மாறிவிட்ட பிள்ளைகளே கொலை செய்யும் தலைக்கூத்தலை அப்படியே உண்மையாக எடுத்திருக்கும் படம்........
கேடி எனும் கருப்பு துரை என்று இதற்கு முன்பாக வந்த திரைப்படம் இதை அடிப்படையாக வந்த படமென்றாலும் அந்த படத்தின் நோக்கம் வேறு இந்த படத்தின் நோக்கம் வேறு அதில் சினிமா தன்மையுண்டு இதை ஓரளவு ராவாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.........
மகனோடு செட் ஆவாத முதியவர் பழனிச்சாமி இரவு காவலாளி வேலை செய்து தங்கை குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். ஒருநாள் காலை வேலை செய்து திரும்பும்போது விபத்து ஏற்பட்டு இடுப்பு எலும்பு முறிந்துவிட மகனால் ஊருக்கு அழைத்து செல்லப்பட்டு அவரது சிகிச்சைக்கு பணம் செலவு செய்ய மனமில்லாத அவனால் கருனைக்கொலை செய்யப்படுகிறார்........
இந்தியா முழுவதும் பல்வேறு பெயரில் நடக்கும் தலைக்கூத்தல் எனப்படும் இந்த பச்சை படுகொலையை மனதில் சிறுதளவும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் எப்படி நியாய படுத்துகிறார்கள் என்பதையும் பாரம்பரியமாக நடந்து வருவதால் மக்களால் ஏற்றுக்கொள்ளபடுகிறது என்று படத்தின் கதை மாந்தர்கள் வழியாக விளக்கியவிதத்திலும் படத்தை பாராட்டலாம்.......
முதல் பாதியில் அந்த காயம்பட்ட முதியவரை லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அலைக்களிக்கும் காட்சியை போன்ற ஒரு காட்சியை நான் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். தொண்ணூற வயதில் முதிர்ந்த தந்தையை காயப்படுத்திய மகனை அறிவேன். படுக்கையாகி போன தாயார் சாப்பிட்டால் எங்கே பேதியாகி கழுவ வேண்டி வருமோ என்று பட்டிணி போட்டவர்களை பற்றியும் கேள்வி பட்டிருக்க்கிறேன். நான் மேலே சொன்ன மூன்று நிகழ்விலும் அந்த பெற்றோர் பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமாக பாசம் கொடுத்து வளர்த்தவர்கள் தான்.மனிதர்கள் எப்படி மாறிவிடுகிறார்கள் பாருங்கள்............
முதல் பாதியில் அழுத்தத்தை கடத்திய திரைப்படம் இரண்டாம் பாதியில் தொட்ட கதைக்கான அழுத்தத்தை தர தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கருப்பசாமியின் கொலைக்கு பின்பான காட்சிகள் அப்படியே ஒரு டாகுமென்ட்ரியாக போகிறது........
முதுமை காரணமாக பெற்றவர்களை கொடுமை படுத்தும் அல்லது வயதானவர்களை அந்த வலியில் இருந்து விடுவிக்கிறோம் என்று கருனை கொலை செய்த/செய்ய யோசித்திகொண்டிருக்கும் தலைக்கூத்தலை பாரம்பரியமாக கொண்டவர்களை ஒருமுறை தங்களை தாங்களே கேள்வி கேட்க வைக்கும் ஒரு பாடம்.........
படம் முடியும் போது மனதில் பாரமாக இறங்கியருக்க வேண்டிய கதை திரைக்கதையின் அழுத்தமின்மை காரணமாக இரண்டாம் பாதியில் ஒரு டாக்குமென்ட்ரியாக மாறிவிடுகிறது........
யாரும் தொடாத கதைகளை தொடும் இயக்குனர்கள் தமிழில் மிக மிக குறைவு என்பதால் உண்மை நிகழ்வுகளை சரியாக கையாண்டு தேசிய விருது பெற்ற இயக்குனரை பாராட்டியேயாக வேண்டும்......

Thursday, April 2, 2020

Trance- பரவசம்/சுயம்மறந்த நிலை

Trance- பரவசம்/சுயம்மறந்த நிலை


“இறைவாக்கு உரைப்பதை தவிர்த்து பரவசபேச்சு பேசுகிறவர் தம்மை மட்டுமே வளர்ச்சியடைய செய்கிறார்” என்கிறது இறைவசனம்.
ஆம் பரவசம் பேசுபவர்கள் மக்களை பரவசபடுத்தி அவர்களை சுயம் இழக்க வைத்து முட்டாளாக்குவதோடு மதங்களை கேலிக்கூத்தாக்கி தம்மையும் தம்மோடு சேர்ந்த சமூக விரோத கும்பல்களயும் வளர்ச்சியடைய வைக்கிறார்கள் என்ற உண்மையை போட்டு உடைக்கிறது ட்ரான்சு திரைப்படம்...........
குமரியில் வசீகர பேச்சுகளால் மக்களை கவர தெரிந்தவர்களில் சிலர் வாழ்க்கையில் உழைத்து வாழ திறனில்லாது மத புத்தகங்களை எடுத்து கொண்டு உண்டியல் குலுக்கி பிழைத்து கிடப்பதாலோ என்னவோ படத்தின் கதாநாயகனை குமரி காரனாக எழுதியிருக்கிறார் வின்சன்ட் வடக்கன்........
வாழ்க்கையில் எல்லாம் இழந்த உறவுகளின் தற்கொலையால் சிறுது மனம்பிறழ்ந்த குமரியை சேர்ந்த மோட்டிவேஷ்னல் ஸ்பீக்கர் விஜு பிரசாத் மும்பையில் தஞ்சமடைகிறார். இவரது பேச்சு திறமையால் மதம் எனும் போதையை விற்கும் கார்ப்பரேட் கும்பலால் தேர்ந்தெடுக்கபடுகிறார். அவர் விற்க தொடங்கிய மதம் எனும் போதை மக்களை என்ன செய்தது அவரை எங்கே கொண்டு விட்டது என்பதை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார் அன்வர் ராசீத்..........
திருநெல்வேலி பக்கம் இயங்கும் சில விவிலிய கல்லூரிகளில் நடப்பதுபோல் க்ராஷ் கோர்சில் பைபிளை படித்து தேர்ச்சி பெறுகிறார் கதாநாயகன் பின்பு திலீஷ் போத்தனில் பயிற்சியில் மேடை உச்சரிப்பு பரவச பேச்சு கற்கிறார். நான் நாரோயிலில் இருந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்கார அண்ணாச்சி பலசரக்கு கடை வியாவாரம் கைகொடுக்காத நேரத்தில் மதபிரச்சாரத்தை தொடங்கினார். அவரது தொடக்க காலத்தில் இரவானால் அவர் பல முன்னனி மதவிற்பனர்களின் வீடியோவை ஓடவிட்டு கையை மைக் போல் வைத்து பரவச பேச்சு கற்பார் அந்த காட்சி அப்படியே படத்தில் வந்திருந்தது. கொஞ்சம் பைபிள் வசனங்கள், கொஞ்சம் மாற்றுமொழி, கொஞ்சம் ஊக்கமருந்து நிறைய பரவச பேச்சு படத்தின் கதைநாயகன் ஜோசுவா கார்ல்டன் JC தயார். JC- jesus christ.......
பகத் JC யாக வாழ்ந்திருக்கிறார் குமாரசெல்வாவின் குன்னிமுத்து நாவலில் வரும் தெங்கேறி ரபேக்காவை அப்படியே கோர்ட் போட்டு நம் கண்முன்பே நிறுத்துகிறார். தமிழகத்தின் தென்மாவட்ட மதவிற்பனர்கள் அனைவரயும் ஒரு காட்சியிலாவது உங்கள் முன்பு வந்து போவார்கள். JC கொடுக்கும் தொலைக்காட்சி பேட்டியில் நெல்லையின் மூத்த மதவிற்பனையாளர் ஒருவரின் அதே தற்கொலை சவடால். அதே போன்று அவரது மகனின் இன்றைய மத நிறுவனத்தை போல் உலகமெங்கும் எங்கும் முன்னூறு கிளைகளுடன் JCயின் மதநிறுவனம் அசுர வளர்ச்சி பெறுகிறது.......
பரவச பேச்சில் விழும் எளியவர்கள் எந்த அளவுக்கு பாதிக்க படுவார்கள் எனபதை போலி போதகர் JCயின் பேச்சை கேட்டு மகளை இழக்கும் வினாயகனின் கதை எடுத்து வைக்கிறது. அப்படி ஒரு மதவியாபாரியால் முழு பைத்தியமாகி வாழ்க்கையை தொலைத்த ஒரு நன்பரின் சகோதரனை நான் அறிவேன். பரவச பேச்சு பேசும் அனைத்து டுபாக்கூர் விற்பனையார்களையும் மக்கள் முன்பு எடுத்து வைத்ததில் சில குறைகள் இருந்தாலும் இந்த படம் மிக முக்கியமான படம்.கேரளத்தின்/ தமிழகத்தின் அனைத்து மதவியாபாரிகளயும் கலங்கடித்த படம். இந்த மதபோதையில் விழுந்து கிடக்கும் அப்பாவிகளுக்கான பாடம்.........
பகத்பாசில், ஶ்ரீநாத் பாசி, வினாயகன், நஸ்ரியா & அமல் நீராட் ஸ்டீல்ஸ் த சோ.......
I am a believer but i am againsts the corparatisation of spirituality- vincent vadakkan........

போத்து_மசாலா

போத்து_மசாலா



அரகிலோ போத்துகறி எடுத்த சின்னதா வெட்டி ஒரு குக்கர்ல ஒரு டேபிள்ஸ்பூண் மல்லி ஒரு டீஸ்பூண் இறச்சி மசாலா ஒரு டீ ஸ்பூண் இஞ்சிபூண்டு விழுது அரடீஸ்பூண் நல்லமொளவு பொடி கா டீஸ்பூண் மஞ்சள்பொடி சேத்து ஒரு பெரிய உள்ளிய கீறி போட்டு உப்பும் சேத்து நல்லா கலந்து நாலு விசில் வச்சி இறக்கணும்........

ஒரு பெரிய உள்ளிய கீத்தா நறுக்கி வெள்ளத்தில போட்டு கொதிச்ச உடனே வடிச்சி மைய அரச்சி எடுக்கணும். ஒரு உருளிய அடுப்புல வச்சி தேங்கெண்ணெய் விட்டு பெரிஞ்சீரகம், பட்ட கிராம்பு ஏலம் போட்டு பொட்டி தெறிச்சதும் அரச்ச உள்ளிய போட்டு நல்லா வதக்கணும்.உள்ளி வதங்கி கலர் மாறி வரும்போது ஒரு தக்காளிய மைய அடிச்சி ஊத்தி வதக்கணும். நல்லா பச்சவாட போவ வதங்கினதும் அதுல ஒரு டேபிள்ஸ்பூண் மல்லிபொடி,அர டீஸ்பூண் சிவப்பு மொளவு பொடி, அரை டீஸ்பூன் சீரகபொடி, அர டீஸ்பூன் இறச்சி மசால் போட்டு மசாலா கரியாம வதக்கி எடுக்கணும்..........

குக்கர்ல வியாக வச்ச போத்துகறிய இந்த மசாலாவோடு சேத்து உப்பு பாத்து அஞ்சி நிமிடம் கொதிக்க விடவும. இப்ப ஒரு உருளைகிழங்க சிறுய துண்டா நறுக்கு போட்டு தீய கொறச்சி வச்சி பத்து நிமிடம் கொதிக்க போட்டு இறக்கு விடவும்.....

சுடுசோறு ,ரொட்டி, புட்டு மற்றும் தோசைக்கு அருமையான சைட்டிஷ் ரெடி.....

நன்றி
#செஃப்
கிழவனார்.....

Sunday, March 29, 2020

அலுவாலியா_என்ற_கலால்_வகுப்பினர்



#அலுவாலியா_என்ற_கலால்_வகுப்பினர்


இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் லாகூர் மற்றும் இந்தியப் பஞ்சாபின் பகுதியில் வாழ்ந்த ஒரு சமுதாயத்தினர்தான் கலால் சாதியினர். அவர்களது அடிப்படைத் தொழில் கோதுமையில் இருந்து சாராயம் வடிகட்டி எடுப்பது. சில கலால்கள் மரம் வெட்டுதல் மற்றும் வேறு மரம் சார்ந்த தொழில்களையும் செய்து வந்தனர் .

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இந்துக்களாக இருந்த அவர்கள் சாராயம் வடிகட்டும் தொழிலைக் குலத்தொழிலாகச் செய்து வந்த காரணத்தால் வர்ணாசிரமத்தின் சூத்திரர்களுக்கும் கீழான சாதிகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர்.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஜசா சிங் கலால் என்ற ஒரு மாவீரர் உருவாகும் வரை வெறும் “சாராயம் காய்ச்சிகளாக” அறியப்பட்ட கலால்கள் பிராமணியத்தின் அனைத்துக் கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப் புறமாக வாழ்ந்து வந்தார்கள்.

கிபி 1718 ஆம் ஆண்டு ஜசா சிங் கலால் இன்றைய பாகிஸ்தான் லாகூரில் அலு என்ற கிராமத்தில் பிறக்கிறார். ஐந்து வயதிலேயே தன் தந்தையை இழந்த ஜசா சிங் குரு கோபிந் சிங்கின் மனைவி மாதா சுந்தரியால் தத்துப் பிள்ளையாக சீக்கிய மதத்தைப் பின்பற்றி வளர்க்கப்படுகிறார்.

இளம் வயதிலேயே வீரராக இருந்த ஜசா சிங் கலால் தன் இனக்குழுவின் "சாராயம் காய்ச்சிகள்", என்ற பெயரை வரலாற்றில் இருந்த அழித்த மாவீரர்.

ஆப்கானிஸ்தான் கான்களுக்கு எதிராக வெறும் இரண்டாயிரம் படை வீரர்களைத் திரட்டி லாகூரைப் பஞ்சாபிற்குச் சொந்தமாக்குகினார். இந்த வெற்றிக்குப் பிறகு அவரின் வீர தீர செயல்களுக்காக லாகூரின் மன்னராக்கபட்டார். பின்னர் ஒட்டுமொத்த சீக்கிய கலால்களுக்கும் தலைவரானார். அதுவரை வெறும் “சாராய காய்ச்சிகளாக” பார்க்கப்பட்ட கலால் சமுதாயத்தினர் சத்ரிய குலமாக தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள். ஜசா சிங்கின் பிறந்த கிராமமான அலு வோடு வாலியாவும் சேர்த்து அலுவாலியா என்று சாதி பெயரை மாற்றி அலுவாலியாவாக மாறினார்கள்.

அடுத்த நூறாண்டில் கோதுமையில் இருந்து சாராயம் வடிகட்டி விற்று வந்த இனக்குழு ஆங்கிலேயர்களுக்கு இனக்கமாக இருந்து தங்களை சத்ரியர்களாக நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். இப்படிக் கலால் என்று சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்படிருந்த சாதியை நாடாள வைத்த ஜசா சிங் அலுவாலியா(கலால்) அலுவாலியாக்களின் நாயகனாகிறார். அவரது நேரடி வாரிசுகள் அல்லாமல் இந்து சீக்கியர் உட்பட்ட அனைத்து கலால்களும் அலுவாலியாவாக மாறுகின்றனர்.

ஆஸ்கல், ஆக்ரே, பானல், பாவ்ரிஷி, பகத், பாம்ப்ரல், பந்தாரி, பார், பாரூ, பெஜாகடே, பிமாத், போந்த்ரா, காப்ரகான், சாந்தவான், சாணி, துயால் , திவான், கர்சியான், கூன், ஜார்டி, செய்சுவால், ஜான்வாதியா, ஜாரி, ஜஸ்பால், ஜோசன், ஜாஜ், ஜோஷ், காத், காண்டல் ,கண்ணு, கபூர், கென்ட், கெர், லுதாத்தியா, மாத்வாதி, மாலி, மாலிகான்,மாமிக்,நாகி, நீல்,பாப்ரா, பைன்டால், பால், ராணா, ரேக்கி ,ரோஷா, ராத்ரா, சாட், சாந், சம்பி, சிகாட், சிகாந், ச்ரிகாந்த், சுல்ஹயான், தல்வார், துள்சி மற்றும் யாஷ்பால் போன்ற சிறு இனக்குழுக்களும் “சாராயம் காய்ச்சிகளாக” இருந்து சத்ரியர்களாக உயர்ந்த கலால்களோடு அல்லது அலுவாலியாக்களோடு தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

இது தான் அலுவாலியா எனப்படும் கலால்களின் சுருக்க வரலாறு. சரி இப்ப எதற்கு இந்த பாகிஸ்தானியர்களை பற்றிய ஆராய்ச்சி என்கிறீர்களா?

அவசியம் இல்லாமல் இல்லை மிக சமீபகாலத்தில் துல்லியமாகச் சொல்வதென்றால் கடந்த ஏழு ஆண்டுகளாக நாடார்கள் சிலர் அலுவாலியா செய்சுவால் போன்ற கலால் இனக்குழுக்களும் நாடார்கள் என்று குறிப்பிட்டு அதிகாரத்தில் இருக்கும் இதன் தலைவர்களோடு செல்பி எடுப்பதும் தாங்கள் அடிக்கும் பேனர்களில் அவர்கள் படங்களை வைப்பதுமாக அமர்க்களபடுத்துகிறார்கள்.

பெரும்பாலும் இவர்கள் நோக்கம் சுயலாப கணக்குகளாக இருக்கவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளதேயன்றி சமுதாய முன்னேற்றம் அல்லவே அல்ல. நாடார்களை அவர்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத இந்தியத்தின் இந்த இனக்குழுக்களோடு இனைப்பது என்பது தமிழ் சமூகத்தில் இருந்து நாடார்களை தனிமைபடுத்தும் முயற்ச்சி எனவும் சிந்திக்க தூண்டுகிறது

இப்படி ஒருகாலத்தில் கோதுமையில் இருந்து “சாராயம் காய்ச்சும்” தொழில் செய்து வந்த கலால்/ அலுவாலியா இனக்குழுவை நாடார் என்று சொல்பவர்களிடம் நீங்கள் கேட்கவேண்டிய ஐந்து கேள்விகள்........?

1.நாடார்கள் என்றாவது சாராயம் காய்ச்சினார்கள் என்று கேள்விப்
பட்டிருக்கிறீர்களா...?

2. நாடார்களுக்கும் கோதுமை சாராயத்திற்கும் என்ன சம்பந்தம்....?

3. லாகூரில் கருப்பட்டி பனைமரம் சம்பந்தமான தொழில்கள் என்ன என்ன?

4. திருவாங்கூரில் இருநூறு ஆண்டுகள் சாதி ஒடுக்குதலைத் தவிர்த்து நாடார்கள் அவுட்காஸ்டட் நபர்கள் என்று என்றாவது அழைக்கப்பட்டனரா?

5. அது இல்லாதபோது நாடார்களை உங்களின் சுய லாபத்திற்காக அன்றி வேறு எதன் அடிப்படையில் அலுவாலியா சாதிப் பட்டத்தில் அடக்க முற்படுகிறீர்கள்......?

நன்றி


For read more abt Aluwhalias and check facts on my above post please rfr to:

1. Thee History of Punjab Rise, progress& present condition vol-1 H. Allen &co -1846
2. East of Indus My memories of Old Punjab - Gurnam s.s. Brard
3. Historical Dictionary of Sikhism- Louis E. Fenech
4.A History of the sikhs: From the origin of the nation to the battles of the sutlej- Joseph Davey Cunningham

#உமையம்மாள்_ராணி_எனும்_ஶ்ரீ_அஸ்வதி_திருநாள்# 3


#உமையம்மாள்_ராணி_எனும்_ஶ்ரீ_அஸ்வதி_திருநாள்# 3

சேரமான் பெருமாள் காலத்திற்குப் பின்பான சேர நாடு சிறு சிறு சமஸ்தானங்களாகப் பிரிக்கப்பட்டு சிறு சிறு நாடுகளாக சேர வழி வந்த மன்னர்களால்(?) ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அதில் மிக முக்கியமான பகுதி வேணாட்டுப் பகுதி. வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு
தலைநகரங்களைக் கொண்டு ஆளப்பட்டு வந்த வேணாட்டின் எல்லைகள் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன. களக்காடு முதல் கொல்லம் வரை இதன் எல்லை இருந்ததாகத் தோராயமாகச் சொல்லலாம்.........

வேணாட்டின் ஆட்சி அதிகாரம் பதினான்காம் நூற்றாண்டு வரை மக்கள் வழியில் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அதன் பிறகு வேணாட்டின் அதிகாரம் மருமக்கள் வழி மன்னர்களிடம் மாறுகிறது. சரியாக எந்த ஆண்டில் அல்லது யாருடைய ஆட்சியில் மருமக்கள் வழிக்கு மாறியது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட முடியவில்லை. ஆனால் வேணாட்டில், அதாவது இன்றைய தென்குமரி பகுதியில் நம்பூதிரிகள் வலிமை பெற்றது பதிமூன்றாம் நூற்றாண்டில் தான். வேணாட்டுப் பகுதிக்கு முன்னரே துலு தேசம், மலபார் பகுதிகள், சாமுத்திரிகளின் கோழிக்கோடு, கொச்சி சமஸ்தானம் ஆகியவை மருமக்கள் வழிக்கு மாறியிருந்தன. இப்போது நம்பூதிரிகளின் வருகையையும் மருமக்கள் வழியையும் இணைத்துப் பார்த்தால் மருமக்கள் வழி தொடங்கப்பட்டதின் நோக்கம் விளங்கும்.......

மருமக்கள் வழியின் அடிப்படை விதிகளின்படி மகனுக்கு தந்தையின் அதிகாரம் கிடைக்காது. மன்னனின் தங்கைக்கோ அல்லது தத்து எடுக்கப்பட்ட தங்கையின் மகனுக்கோதான் அதிகாரம் கிடைக்கும். இதனால் அக்காலத்தில் திருவாங்கூர் ராணிகள் எனப்படுபவர் மன்னனின் மனைவி அல்ல மன்னனில் தங்கையே ஆவர். முதலாம் பதிவில் குறப்பிட்டது போல மகயிரம் திருநாளின் மகன் அதித்ய வர்மா மன்னனாகிறார். அவரது தங்கை அஸ்வதி திருநாள் உமையம்மா ஆற்றிங்கல் ராணியாகிறார். இதில் அடுத்த விதி ராணிக்கு பிறக்கும் மகனின் தந்தைக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர் ஒரு மகனை உருவாக்கப் பயன்படுத்திய ஒரு ஆண் அவ்வளவே..........

பெரும்பாலும் அதற்குப் பயன்படும் கருவி ஒரு நம்பூதிரியாக இருப்பார் அல்லது வேறு தேசத்தில் இருந்து பயணப்பட்ட அரச குடும்ப இளைஞனாகவும் இருக்கலாம். அதனால் பிற்கால கேரள வரலாற்றில் பல மன்னர்களின் தந்தை பெயர் இடம் பெற்றிருக்காது. ஆனால் சில குறிப்புகளை ஆராயும்போது சமஸ்தானங்களில் வீரவரலாறு படைத்த மன்னர்களை ரேர் ப்ரீட் அல்லது வீரிய வித்து என்று குறிப்பிடப்படுவதைக் காணலாம். கோட்டயம் கேரளா வர்மா , மார்த்தாண்ட வர்மா போன்றவர்கள் அந்த வகைப்பட்டவர்களாவர். மார்த்தாண்ட வர்மாவின் தந்தையார் பிஜப்பூர் அரச குடும்பத்தில் இருந்து விருந்தினராக கொளத்துநாட்டிற்கு வந்தவர் எனவும் கூறப்படுவதுண்டு. உமையம்மா ராணியின் தாய் மகயிரம் திருநாள் என்பதைத் தவிர்த்து அவரது தந்தை இன்னார் என்பதற்கு எந்த குறிப்புகளும்
இல்லை. அவரது சாகசங்களை நோக்கும்போது அவரும் ஒரு ரேர் ப்ரீடாக இருக்கலாம்............

ஆதித்யா வர்மா வேணாட்டை ஆளத் தொடங்கியவுடன் ஆற்றிங்கல் ராணியாக இருந்த உமையம்மை ஒரு மகனை ஈன்றெடுக்க வேண்டும். அடுத்த குலசேகர பெருமாளை கொடுக்க வேண்டியவர் அவர்தான் ஆனால் அவருக்கு இணைகள் பலர் இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லை அதனால் இப்போது மருமக்கள் வழி வழக்கப்படி அவர் ஒரு மகனை தத்தெடுக்க வேண்டும். பொதுவாக தத்து எடுக்கும்போது பெரிய ஆலோசனைகளுக்கு பிறகே தத்தெடுப்பார்கள். ஆனால் உமையம்மை ராணி அவர்கள் அதிலும் தன்போக்கைக் கடைப்பிடுத்தார். அன்று தேசிங்கு நாடு ,கொட்டாரக்கர , நெடுமங்காடு, கருநாகப்பள்ளி , கார்த்திகபள்ளி, காயம்கொளம் போன்ற பல பகுதிகள் டச்சு படைகளின் சொல்படி நடப்பவைகளாக இருந்ததன. ஆதித்யா வர்மாவிற்கு பின்பான அரசு டச்சி கையில் வீழ வேண்டும் என்பது அன்றைய வேணாட்டு அரச குடும்பத்திற்கு எதிரானவர்களின் நோக்கமாக இருந்தது.

உமையம்மை தன் அடுத்த வாரிசை டச்சுக்கு ஏற்றதாக
தேர்ந்தெடுக்கவில்லை. தன்னைச் சூழ்ந்துள்ள பகுதிகள் எல்லாம் டச்சுக்களுக்கு அடிப்பணிந்து இருக்க டச்சு படைக்கு நேரெதிராக போர்ச்சக்கீசியர்களுக்கு அடிபணிந்து இருந்த கொச்சி சமஸ்தானத்தின் வெள்ளரப்பள்ளில் கோவில்லகத்தில் இருந்து 1672 ஆம் ஆண்டு ரவி வர்மாவை தனது மகனாக தத்தெடுத்துக் கொண்டார். இதன் மூலம் தன்தாயின் அதே கோவிலகத்துன் வாரிசை மீண்டும் வேணாட்டின் மன்னராக்க முடிவு செய்தார்.இதனால் நெடுமங்காடு உட்பட்ட அனைத்து அரச குடும்பங்களின் பெருங்கோபத்திற்கும் ஆளாகியிருந்தார். ஆனால் அதையெல்லாம் பொருட்டாகவே எண்ணாத உமையம்மாள் ராணி ஆதித்யா வர்மா காலத்திற்குப் பிறகு ரவிவர்மாவை வேணாட்டின் மன்னராக முடிச்சூட்டியிருந்தார். மேற்சொன்ன இந்த ரவி வர்மாவின் தத்தெடுப்பானது
போர்களுக்கும் புதிய வரலாற்றிர்க்கும் வழி வகுத்திருந்தது..............

உமையம்மாள் ராணியின்மேல் எட்டு வீட்டு பிள்ளைமாருக்கும் நெடுமங்காடு கேரள வர்மாவிற்கும் டச்சு கம்பெனிக்கும் கோபம் அதிமாகிக்கொண்டேயிருந்தது. வேணாட்டு மன்னரான ரவிவர்மாவின் பலவீனமும் அவர்களுக்கு ஏதுவாக இருக்க கலகங்கள் முற்றியது. எதற்கும் அடிபணியாத உமையம்மாள் ராணி திருவாங்கூர் அரச வரலாற்றிலிருந்து தன் வரலாறு மறைக்கபடுவதற்கான பெருங்காரியம் ஒன்றில் இறங்கினார். ஆம் பெரும் வீரனும் தன் காதலர்களில் ஒருவருமான கோட்டயம் கேரள வர்மாவை தன் இரண்டாவது மகனாக தத்தெடுத்து இரணியலின் இளைய ராஜாவிக்கினார் அந்த வீரனைக் கொண்டே தன் எதிரிகளை அடி பணிய வைத்தார்.

கோட்டயம் கேரள வர்மாவின் தத்தெடுப்பின் மூலம் தனது பெரும்பான்மையான எதிரிகளை இல்லாமல் செய்திருந்த உமையம்மாள் கோட்டயம் கேரள வர்மா எட்டு வீட்டு பிள்ளைமாரால் படுகொலை செய்யபட்டபின் சில சமரசங்களை செய்து கொண்டார். ரவிவர்மாவிற்கு பிறகான வாரிசுகளைச் சமரசங்கள் செய்து கொண்டு குளத்துனாடு கோலோத்திரி அரச குடும்பத்தில் இருந்து தத்தெடுத்துக் கொண்டார். இரண்டு ஆண் பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும் கோலோத்திரியில் இருந்து தத்தெடுக்க பட்டனர் அதில் ஒரு பெண்ணின் மகன்தான் டச்சு படையை வென்று திருவாங்கூரை கட்டியமைத்த மார்த்தாண்ட வர்மா.............

ஆக உமையம்மாள் என்ற அஸ்வதி திருநாள் தத்தெடுத்து கொண்ட பிள்ளைகளின் எண்ணிக்கை கோட்டயம் கேரள வர்மாவோடு சேர்த்து மொத்தம் எட்டு. அவருக்கென்று ஒரு மகன் இருந்திருந்தால் ஓரு வேளை வேணாட்டின் வரலாறு தொடர்ந்திருக்கலாம் அல்லது திருவாங்கூர் வரலாறு மாறியிருக்கலாம்.........

தொடரும்........


1.The genealogy of Sovereigns of travanncore- ulloor.s.Parameshwara Iyer
2.The Kulasekhara Perumals of Travancore -Mark De Lannoy
3.Governer General and council to the Heren XVII,0 dec 1689
4.VOC Documents during Stein van Gollanesse
5.Umayamma Rani - Ibrahim Kunju
6.A Survey of Kerala History - A Sreedhara Menon
7. தென் குமரி சரித்திரம் - அ .க பெருமாள்
8.Queen of Kuppakkas- The Ivory Throne
— with பா.ச. பாலசிங், Elstin Raj, Udaya Kumar, Vel Murugan, Satheesh Velayudhan and Dhinakar Nd.

#உமையம்மாள்_ராணி_எனும்_ஶ்ரீ_அஸ்வதி_திருநாள்# 2





#உமையம்மாள்_ராணி_எனும்_ஶ்ரீ_அஸ்வதி_திருநாள்# 2


“அவர் பேரிளம் பருவத்தில் மாநிறத்தில் இருந்த பேரழகி. அவரது நீண்ட கருங்கூந்தலை பின்பக்கமாக கொண்டை போட்டிருந்தார் அவரது அழகிய நீண்ட காதுகள், கழுத்து முதல் கைகள் வரையில் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள் அனிந்திருந்தார். உடையாக இடுப்பிற்கு மேலே ஒரு வெண்பருத்தி உடையை அரைகுறையாக போர்த்தியிருந்தார். அரை நிர்வானமாகவே இருந்தாலும் அது கம்பீரமான பேரழகு”.......

இப்படித்தான் அஸ்வதி திருநாள் உமையம்மை ராணியின் அழகை அவர் ஆற்றிங்கல் இளைய ராணியாக இருந்தபோது அவரை சந்தித்த டச்சு தூதுவன் எழுதி வைத்திருந்தான்.ஆம் உமையம்மாள் என்ற அஸ்வதி திருநாள் ராணி மாநிறமே என்றாலும் காண்போரை கிறுங்கடிக்கும் பேரழகியாக இருந்திருக்கிறார். அவரை சுற்றிய காதல் கதைகள் ஏராளம் பொதுவாக மருமக்கள் வழியை பின்பற்றும் தம்புராக்கன் தரவாடுகளின் பெண்களுக்கு இனைதேடுவதில் அதீத சுதந்திரம் உள்ளது என்று வரலாறு பதிந்து வைத்திருக்கிறது ஆனால் ஆற்றிங்கல் மகாராணிகளை எடுத்துக்கொண்டால் அந்த சுதந்திரம் பெரிதாக இல்லையெனலாம். ஆனால் வேணாட்டின் கடைசி மகாராணியான அஸ்வதி திருநாள் இதில் அத்தனை தடைகளையும் கட்டுப்பாடுகளயும் உடைத்திருந்தார்...............

வரலாற்றில் அவரது காதல் வாழ்வை பற்றிய குறிப்புகள் பல இருந்தாலும் மிக முக்கியமானது மாபெரும் வீரனும் கவிஞனுமான கோட்டயம் இளைய ராஜாவான கேரளவர்மாவுடனான உறவுதான். உமையம்மை ராணி அஞ்சுதெங்கு துறைமைகத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த வர்காலா அரன்மனையில் தங்கியிருந்த போது அந்த வழியாக ராம்நாட்டிற்கி சென்ற கோட்டயம் இளைய ராஜாவுடன் காதல் வயப்பட்டார். அவர் மீது கொண்ட காதலின் காரணமாக உமையம்மா வேணாட்டின் ராணியாக இருந்தபோது தன் காதலனை இரணியல் இளைய ராஜாவாக முடிசூட்டினார். மருமக்கள் வழிக்கு மாறி போயிருந்த வேணாட்டின் சட்டத்திட்டத்தின் படி ராணி தன் காதலனை ராஜாவாக முடிசூட்ட முடியாது என்பதால் தன் காதலனையே தன் மகனாக தத்தெடுத்து அவரை இரணியல் இளைய ராஜாவாக்கி தன் அரசியல் ஆலோசகராகவும் வைத்திருந்தார்.............

இன்றளவும் உலகமெங்கும் ஆணாதிக்கமும் களவியலை பொறுத்தவரை பெண்ணை ஆண் தன் இச்சையை தீர்த்து கொள்ள பயன்படுத்தும் பொருளாகவும் தான் பயன்படுத்திவருகிறான் . ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் மேற்குலகையே வியந்து பார்க்க வைத்திருந்தார் உமையம்மா ராணி இனைதேடுவதில் மட்டற்ற சுதந்திரத்தை கொண்டிருந்தவராக உமையம்மை ராணியை வரலாறு பதிந்திருக்கிறது. “ ராணியை கவர்ந்த எந்த ஒரு ஆண்மகனயும் ராணி தன் துணையாக தேரந்தெடுத்துக்கொண்டார். அதற்காக அவர் சட்ட முரண்களை பற்றி கவலைப்பட்டதே இல்லை. பொதுவாக பேரழகும் பேராண்மையும் கொண்ட இளைஞர்கள் தான் அவரது அந்தபுரத்தை நிறைத்திரிந்தார்கள்” என்று அன்றைய வெள்ளை அதகாரி ஒருவர் பதிந்திருக்கிறார்.........

ராணி தன் இணையர்களோடு சலிப்பு ஏற்படும்போது உடனடியாக புது இணை தேடியிருப்பார் சட்ட திட்டங்களுக்கோ மற்றவர்களுக்கோ அவர் பயந்ததில்லை என்கிறது வரலாறு. மொத்த உலகமும் பாலியல் சுதந்திரம் என்பது ஆண்களுக்கான உரிமை சொத்து என்றிருந்த காலத்தில் தென்கோடியில் வாழ்ந்த உமையம்மாள் ராணியன் வாழ்வியலை பார்த்து மேற்குலகமே வியந்து போயிருந்தது என்பது தான் உண்மை........

ராணியன் இந்த காதலர்கள் பட்டயலில் வெள்ளையர்களும் டச்சி காரர்களும் இருந்திருக்கிறார்கள். அப்படி ஒரு வெள்ளை அதிகாரிக்கு காதல் பரிசாக கிடைத்தது தான் அஞ்சுதெங்கு துறைமுகம் என்று குறிப்பு சொல்கிறது..........

அந்தபுரங்கள் மன்னர்கள் அந்தி உறங்கும் இடங்களாக இருந்த ஒரு காலகட்டத்தில், தான் விருப்ப பட்டவரோடு தன் விருப்பத்திற்கேற்ப வாழ்ந்த உமையம்மாள் திருவாங்கூருக்கு பிள்ளை பெற்று கொடுக்கவும் அல்லது யாரோ பெற்ற பிள்ளைகளை வளர்த்தி கொடுக்கவும் இருந்த ஆற்றிங்கல் ராணிகளின் மத்தியில் தனித்தே தெரிகிறார்............

தொடரும்.........

1. The Honorable Company- History of English East India company -John kaey
2. A Voyage to the East Indies- John Henry Grose
3.English East Indian company and the local rulers in India- Leena Moore
4. VOC document during Conrnellis van Meckeeren
5. Umayamma rani - Ibrahim Kunju
6.The kulesekhara perumals of Travancore- Mark De Lennay
7 .Queen of Kuppakkas- The Ivory Throne
8. Travancore state Manual- TK velupillai